ஆன்மிகம்

35 ரூபாயில் வாழ்க்கையை மாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

மதங்களை கடந்த ஒரு ஒப்பற்ற மாணிக்கமாக விளங்குபவர் சாய் பாபா. தான் இந்த மதத்தை சார்ந்தவர், தன்னை இந்த முறையில் தான் வழிபட வேண்டும் என்று தன் பக்தர்களுக்கு எப்போதும் அவர் கட்டளை இட்டதில்லை. தன்னை வழிபடுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கலாக இருந்தாலும் அந்த மதத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு தன்னை வழிபடுவதே சிறந்தது என்னும் எண்ணம் கொண்டவராக சாய் பாபா திகழ்கிறார். அதனாலேயே அவரு மட்டும் அனைத்து மாதங்களில் இருந்தும் பக்த கொடிகள் இருக்கிறார்கள். எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு சாய் பாபா அருள்மழை பொழிவார் என்பதற்கு சான்றாக பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு சம்பவத்தை இப்போது பார்ப்போம்.

1960 -ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. குமாரி தத்தன் என்ற பெண்மணி கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை ஒரு துறவியாகவே இருந்து கழித்தார். ஆனால் வருடங்கள் பல கடக்கையில் அவருக்கு ஒரே அறையில் இருந்து இறைபணி செய்வதில் நாட்டம் குறைந்தது. அனைத்தும் அவருக்கு வெறுப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் தான் தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக வெளியில் தன் மருமகனை தவிர வேறு யாரும் இல்லை. தன் மருமகன் தன்னை பார்த்துக்கொள்வாரா ?, அவரது வீட்டிற்கு எப்படி செல்வது என்று எண்ணி அவர் தன் முடிவை தள்ளிபோட்டுக்கொண்டே வந்தார். வெகுநாட்களாக இப்படியே அவர் மன அழுத்தத்தில் தவித்தவாறே தன் வாழ்க்கையை நடத்தினார்.

ஒரு நாள் திடீரெனெ அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்த ஒரு முஸ்லீம் துறவி, நீ மடத்தை விட்டு வெளியேறு உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என்று அவரிடம் கூறினார். அதோடு நீ வெளியில் சென்ற பிறகும் உன்னுடைய மத கோட்பாடுகளுக்கு ஏற்ப நடந்துகொள் உனது எல்லா துன்பங்களும் மறையும் என்றார். பிறகு அவர் 35 ரூபாய் காணிக்கையை தனக்கு அளிக்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண்மணியிடம் அப்போது பணம் இல்லை. அதையே அவர் அந்த துறவியிடமும் கூறினார். ஆனால் அந்த துறவி ஒரு அறையில் இருக்கும் டப்பாவை குறிப்பிட்டு அதில் 35 ரூபாய் இருக்கிறது என்று கூறினார்.

அந்த பெண்மணி அந்த அறைக்கு சென்று டப்பாவை திறந்து பார்த்தால் 35 ரூபாய் சரியாக இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவர் வெளியே வந்தார். ஆனால் அந்த முஸ்லீம் துறவி அதற்குள் வேறெங்கோ சென்றுவிட்டார். உடனே அந்த பெண்மணி தான் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினார். வழியில் நடந்து செல்கையில் ஒரு கடையில் பாபாவின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும், தன்னிடம் வந்து பேசிய துறவி இவர் தான் என்பதை அவர் அறிந்தார். அன்றில் இருந்து அவர் தன் மத வழிபாட்டோடு பாபாவையும் வணங்க துவங்கினார். அதோடு பாபா கூறியது போல அவருடைய மருமகன் அவரை நன்றாக கவனித்துக்கொண்டார். இப்படி எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை ஆசிர்வதித்து அந்த மத கோட்பாடுகளுக்கு உட்பட்டு தன்னை வழிபடுமாறு கூறுகிறார் பாபா.

Back to top button