யாழில் பேக்கரி மற்றும் உணவகங்கள் உட்பட நான்கு உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்!
யாழ்ப்பாணத்தில், கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன கடந்த 13.11.2023 திங்கட்கிழமை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை நடவடிக்கை யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையிலும் 03 உணவகங்கள், ஓர் பேக்கரி என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை பொது சுகாதார பரிசோதகரிடம் சிக்கின. இதனையடுத்து 03 உணவகங்கள், மற்றும் பேக்கரி என்பவற்றிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் 15.11.2023ம் திகதி புதன்கிழமை தனித்தனியே வழக்குகள் பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் சுகாதார சீர்கேடுகள் திருத்தம் செய்யும் வரை 04 உணவு கையாளும் நிலையங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார்.
அத்துடன், வழக்குகளை மேலதிக விசாரணைகளிற்காக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தார். இதனைத்தொடர்ந்து 04 உணவு கையாளும் நிலையங்களும் பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபனால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.