உடல்நலம்

குடற்புழுக்களை (Stomach Worms) வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம்

குடற்புழுக்களுக்கு அடிப்படை காரணமே அசுத்தமான சுற்றுப்புறமாகத் தான் இருக்கும், குடற்புழு தொல்லை இருந்தால் சரியாக சாப்பிடாமல், அப்படியே சாப்பிட்டும் உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படாமல் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட நேரிடும்.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவுப்பழக்கத்தால் குடற்புழு பிரச்சனை தீவிரமடைகிறது.

உருண்டை புழு, கொக்கி புழு, சாட்டை புழு, நாடா புழு என பல வகைகள் உண்டு, கைகள் சுத்தமில்லாமல் சாப்பிடும் போது புழுவின் முட்டைகள் உடலுக்குள் செல்கிறது.

சிறுகுடலில் லார்வா எனப்படும் குறும்புழுக்கள் வெளிவந்து ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குள் செல்கிறது, நான்கு நாட்களில் அங்கிருந்து இதயத்துக்கு சென்று நுரையீரலுக்குள் நுழையும்.

பின்னர் அங்கிருந்து இரைப்பைக்கு வரும், இதற்கு மூன்று மாத காலம் நேரம் எடுத்துக்கொள்ளும், இக்காலகட்டத்தில் முழு புழுவாக வளர்ச்சியடைந்து தொல்லை கொடுக்கத் தொடங்கி விடும்.

இதனால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, செரிமானமின்மை இருக்கலாம், உடல் மெலிந்து உடல் எடையும் குறையத் தொடங்கும்.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும், புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் குடற்புழு தொல்லையை சரிசெய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.

தவிர்க்க என்ன செய்யலாம்?

  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், சுய சுத்தம் மிக முக்கியம்.
  • கழிப்பறை, குளியலறை சுத்தம் பேணவும்.
  • கழிப்பறை சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.
  • சகதி, அசுத்தமான மண் உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட விட வேண்டும்.
  • சமைப்பதற்கு முன்னர் நன்றாக கழுவிய பின்னர் பயன்படுத்தவும்.
  • கொதிக்க வைத்த ஆறவைத்த தண்ணீரை பருகுங்கள்.
  • வெளியில் செல்வதாக இருந்தால் செருப்பை அணிந்து கொள்ளுங்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கால்களை சுத்தப்படுத்த வேண்டும்.
  • கண்ட கண்ட இடங்களில் சாப்பிடக்கூடாது, அசைவ உணவுகள் சமைக்கும் போது நன்றாக வேகவைத்த பின்னர் சாப்பிடவும்.

வீட்டு வைத்தியம்
குடற்புழுவை தடுக்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரைகள் வழங்கப்படுகிறது, அதை கண்டிப்பான முறையில் பயன்படுத்தவும்.

அன்றாட உணவில் கீரை, பப்பாளி, ஓமம், மஞ்சள் என சாப்பிட்டு வந்தால் தீர்வு உண்டு.

மாதுளை, பூண்டு, பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் எடுத்துக்கொண்டு சில மணிநேரம் கழித்து விளக்கெண்ணெய் குடிக்கவும், இதில் புழுக்கள் இறந்துவிடும்.

காலையில் ஒரு கப் கேரட் எடுத்துக்கொள்ளலாம், வேறு எதையும் சாப்பிட வேண்டாம்.

ஒரு டீஸ்பூன் தேனுடன் 4 டீஸ்பூன் பப்பாளி சாறு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இதை இரண்டு நாட்களுக்கு செய்யுங்கள்.

தேனுடன் துளசி இலை சாறும் குடற்புழுக்களை வெளியேற்ற சிறந்தது.

கருப்பு மிளகு, உப்புடன் தக்காளி 2 சேர்த்து காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் அருந்தலாம்.

மாதுளை செடியின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்துவிட்டு சில நிமிடங்களில் அடுப்பை அணைத்துவிடவும். இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

மோருடன் சிறிதளவு கசகசா சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வருவதும் தீர்வை தரும்.

குறிப்பு– எந்தவொரு புதிய முறையாக இருந்தாலும் நிபுணர்/மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றவும்.

Back to top button