அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு மட்டும் மாதாந்தம் வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவு
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 05 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், அஸ்வெசும நலன் திட்டத்துக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் தங்களுக்கான பணத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அரச வங்கிகளின் முன்னால் பெருமளவில் திரண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை தங்களது கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.