இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இணையத்தளத்தின் ஊடாக பதிவு
இக்குறித்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், இ – மின் கட்டண சேவையை பெற்றுக்கொள்ள ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும். இல்லாவிடின், 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL மின்சாரக் கணக்கு எண் மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும். தற்போது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களிலும் மட்டுமே EBILL வழங்கப்படுகின்றன. எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.