இலங்கை

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17.04.2023) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நடைமுறைக்கமைய நாளை (18.04.2023) முதல் மீண்டும் முன்னர் வழங்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடுகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீட்டரிலிருந்து 75 லீட்டராகவும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரிலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Back to top button