இலங்கையில் தங்கத்தின் விலை குறையுமா..! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்களில் தங்கமும் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக தங்க இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதி
உலக சந்தைக்கும், இலங்கையின் தங்க நிலவரத்தையும் பொருத்த வரையில் 10000 வித்தியாசத்தில் தங்க விலை நிலவி வருகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
இல்லையெனில் அரசாங்கமாவது இறக்குமதி பொறுப்பை ஏற்க வேண்டும். எனினும் இது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. அதேபோன்று அண்மையில் இலங்கையில் திடீரென தங்க விலை குறைந்து அடுத்த சில தினங்களிலே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.
இதற்கு காரணம் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்ததுடன், இலங்கையிலும் டொலரின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதுவே தங்க விலை குறைந்தமைக்கு காரணம்.
இலங்கையில் தங்க தேவை காணப்படுகிறது. எனினும் இதனை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இலங்கையில் தங்க விலை
24 கரட் தங்கத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கத்தால் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டமையால் 22 கரட் தங்கத்தை கொண்டு வந்து அதை புடம் போட்டு 24 கரட்டாக்கி மீண்டும் 22 கரட்டாக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
நாட்டில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 100 சதவீதம் தங்க வியாபாரம் நடந்திருந்தால் தற்போது 40 சதவீதமே விற்பனை நடக்கிறது. இலங்கையில் தங்க இறக்குமதி தடை நீக்கப்பட்டால் கட்டாயம் இலங்கையில் தங்க விலை குறையும்.
உலக சந்தையை விட 2000 ரூபா வித்தியாசத்திலேயே தங்கத்தை பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும். அதாவது 145000 ரூபா வரை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை குறைவதற்கான சாத்தியம் இருக்கிறது.
இலங்கையின் நாணய பெறுமதியை வைத்து தான் இலங்கையில் தங்கத்தின் பெறுமதி நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக தங்க இறக்குமதி தடை நீக்கப்படுமாக இருந்தால் தங்கத்தின் பெறுமதியில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.