இலங்கை

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவை 2023 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ‘செரியபாணி’ என்பது சிப்பிங் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா (எஸ்சிஐ) க்கு சொந்தமான அதிவேகக் கப்பலாகும், இது 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் அகலமும், 150 பயணிகள் தங்கும் திறன் கொண்டது. இந்த கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருவதற்கு ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் ஆகும். இதற்காக ஒரு வழி பயணத்திற்கு 26,750 இலங்கை ரூபாயும் இருவழிப்பயணத்துக்கு 53,500 ரூபாயும் அறவிடப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

Back to top button