அமெரிக்காவிடம் தொழில்நுட்ப உதவி கோரும் இலங்கை
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியை அமெரிக்காவிடம் இருந்து இலங்கை கோரியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் நேற்று (10) கொழும்பில் பதினான்காவது வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு சந்திப்பை நடத்தின. இந்தக்கூட்டத்தின் போது, இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் முதலீட்டு சூழல், சமீபத்திய தொழிலாளர் சீர்திருத்தங்கள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு நடைமுறை, சுங்கம் உட்பட்ட சந்தை அணுகலுக்கான தொழில்நுட்ப தடைகள் குறித்து ஆராய்ந்தனர்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை
இந்தநிலையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அங்கீகரிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் என்பன முக்கிய உந்துசக்திகளாக வலியுறுத்தப்பட்டன. அத்துடன் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அடிக்கோடிட்டுக் காட்டியது இதன்போதே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடைமுறைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் என்று அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.