லண்டனில் ஹொட்டல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் இலங்கைத் தமிழ் இரட்டைச் சகோதரிகள்!
இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர், ஹொட்டல் தொழிலில் அசத்தி வருகிறார்கள்.
லண்டனில் கிடைத்த ஏமாற்றம்
இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்து, கொழும்புவில் வளர்ந்த வசந்தினியும் தர்ஷினியும் (Vasanthini and Dharshini Perumal, 48) இரட்டையர்கள்.
வாழ்க்கையில் ஒரு மாற்றம் விரும்பி, 2011ஆம் ஆண்டு இருவரும் தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள். சிறுவயதிலிருந்தே அடிக்கடி பிரித்தானியாவுக்கு வந்து சென்றுள்ளதால், பிரித்தானியாவும் சொந்த நாடு போலவேதான் இருந்துள்ளது அவர்களுக்கு.
ஆனாலும், ஒரு ஏமாற்றம். அது என்னவென்றால், லண்டனில் இலங்கை உணவு கிடைக்கவில்லையாம். லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.
ஏமாற்றத்தை பாஸிட்டிவாக மாற்றிய சகோதரிகள்
ஆக, லண்டனில் இலங்கை உணவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்ததும், தாங்களே ஏன் ஒரு உணவகத்தை துவங்கக்கூடாது என்ற எண்ணம் உருவாக, அதன் விளைவாக உருவானதுதான், Karapincha உணவகம். அதாவது கறபிஞ்சா என்றால் கறிவேப்பிலை என்று பொருள்.
சகோதரிகளின் தாய் சமையலில் கைதேர்ந்தவர். இலங்கையில் சகோதரிகளைக் கவனித்துக்கொள்வதற்காக ஒரு பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் சிங்களர். ஆக, வசந்தினி தர்ஷினி சகோதரிகளுக்கு தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவும் தெரியும், தங்களை கவனித்துக்கொண்ட அந்த பெண்மணியிடம் கற்ற சிங்களர்களின் உணவும் தெரியும்.
எல்லா அனுபவங்களையும் சேர்த்து, முதலில் ஒரு உணவகம் துவங்கிய வசந்தினி தர்ஷினி சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களைத் துவக்கியுள்ளார்கள்.
தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, அப்படியே வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.
இலங்கையில் புகழ்பெற்ற கொத்து ரொட்டியில் ஒரு சின்ன ட்விஸ்ட் செய்து, சிக்கன் கறியுடன் அன்னாசிப்பழ ஊறுகாயும் சேர்த்து பரிமாறுகிறார்கள். ஆக, லண்டனில் வாழும் இலங்கையர்களும் தங்கள் ஊர் உணவை ஒரு பிடி பிடிக்கவேண்டுமானால், இந்த Karapincha உணவகத்துக்குச் செல்லலாம்!