இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சி!
இலங்கை சுங்கத்தால் தற்காலிகமாக வௌியிடப்பட்ட தரவு அறிக்கையின் படி இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.94 சதவீதத்தால் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆடைகள் மற்றும் ஜவுளி, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திகள், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகளுக்கான கேள்வி குறைவதால், சரக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் சேவைகள் ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2,304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55.67% வளர்ச்சியாகும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி சேவைகள் தகவல் தொழில்நுட்பம்/ வர்த்தக செயல்முறை முகாமைத்துவம் (ICT/BPM), கட்டுமானம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் வணிகச் சேவைகளை உள்ளடக்கியதாகும்.