இலங்கை

இலங்கையில் பிரச்சினையான சூழ்நிலையில் அரச வங்கி அமைப்பு: யாழில் ஜனாதிபதி ரணில்

நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தொழில் நிபுணர்களுடன் நடத்திய சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. 2020ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் காரணமாக, நிலைமை மேலும் சிக்கலானது.

இந்நிலையில், 2022இல் இது மிகவும் மோசமாக மாறியது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மறைப்பெறுமானத்தில் 7% சதவீதத்திற்கும் குறைந்துவிட்டது. இந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, 2023ல் நாட்டில் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்த போதிலும், இரண்டாவது இரண்டு காலாண்டுகளில் எந்த குறைவும் இல்லை மற்றும் நான்காவது காலாண்டில் சாதகமான வளர்ச்சி இருந்தது. இதனடிப்படையில், இந்த ஆண்டு 3% சாதகமான பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், 2025இல் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழியில் நாம் தொடரலாம். இந்த இரண்டு வருடங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் என்றே கூற வேண்டும். இன்று நாட்டின் பொருளாதார அமைப்பை மாற்றியுள்ளோம். இனி பணம் அச்சிட மாட்டோம். பணம் அச்சிடப்பட்டால், ரூபாயின் மதிப்பு குறைந்து, பணவீக்கம் உயரும். மேலும் நாங்கள் வங்கிகளில் கடன் வாங்குவதில்லை. ஏனெனில் நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சனையான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. எனவே கடன் வாங்கி பணம் அச்சடிக்காமல் முன்னேற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button