கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த: பொலிஸார் வெளியிட்ட தகவல்
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர். சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற SUV வாகனம் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.
சாரதி மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார். கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்நிலை சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டதுடன் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியாகும். கடந்த கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்டி வெடித்த நிலையில், ஆட்சியில் இருந்து ராஜபக்சர்கள் விரட்டப்பட்டனர். இதன்போது காலி முகத்திலிடலில் பெரும் வன்முறை சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை உயிரிழந்த சனத் நிஷாங்கவே முன்னெடுத்திருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ராஜபக்ஷர்களின் தீவிர விசுவாசியான அவர், மின்சார கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்த நாமல் ராஜபக்சவையும் காப்பாற்றியிருந்தார். பல மாதங்களாக செலுத்தாத மின்சார கட்டணத்தை பல மில்லியன்களில் செலுத்தியிருந்தார்.