வரி தொடர்பான மதிப்பீடு பெப்ரவரியில்
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அதிகரிக்கப்பட்டுள்ள வரி மறு சீரமைப்பு மூலம் அரச வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முறையான மதிப்பீடு ஒன்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே வரி அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் சாத்தியமான சமிக்ஞைகளை வழங்கி வரும் நிலையில் இலங்கைக்கு அந்த நிதியம் வழங்க தீர்மானித்துள்ள நிதி ஒத்துழைப்பில் முதலாவது தவணை நிதியை மிக விரைவில் நாட்டுக்கு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதித்துறை மறுசீரமைப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ள போதிலும் அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் சற்று கடினமாக அமையும் என்ற போதிலும்.கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனுடன் மேற்கொள்ளப் பட்ட பேச்சு வார்த்தையின் போது நிதித்துறையில் மேலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவருக்கு தாம் தெளிவுபடுத்தியதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பிலும் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.