இலங்கை

தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் : அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார். அபே ஜனபல பக்‌ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலின் போது சிங்கள பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய இக்கட்சி, கடைசியில் ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டது. சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை பெலியத்தை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கட்சியின் தலைவர் சமன் பெரேரா , இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த இன்னும் நால்வரும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Back to top button