இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள தடை
பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையின் போது மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை அதிக வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்வி அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது