நாட்டில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையின் ஆரம்பம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
வாட்டி வதைக்கும் கொடும் வெயில் மாறிப்போகும் காலமிது.பெரும்போக விவசாய முன்னெடுப்புக்களில் மும்முரமாகிய விவசாயிகளின் மனங்களை மழை வந்து குளிர்ந்திடச்செய்தது. நேற்று முன்தினம் (21.09.2023) மாலையிலிருந்து வன்னியின் கிழக்கு பகுதியெங்கும் பரவலாக நல்ல மழை பொழிந்தது. மாலை நான்கு மணிக்கு பொழிய ஆரம்பித்த மழை இரவு எட்டு மணிவரை தொடர்ந்தது. இடி முழக்கத்தோடு மின்னல் தாக்கத்தின் அச்சமும் அதிகம் இருந்தது. சிலாவத்தையில் வயல் வெளிகளும், நந்திவெளி வயல் நிலங்களும் மழையினால் நீர் நிரம்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது.(புகைப்படங்கள் அந்த வயல் நிலங்களில் எடுக்கப்பட்டவையாகும்.
பெரும்போகத்திற்கு தயாராகும் வயல் நிலங்கள்
பெரும் போகத்திற்கான விதைப்புக்காக வயல் நிலங்களை உழுது தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது பொழியும் மழையினால் மகிழ்ச்சி அடைவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதிக மேடான நிலங்களில் உழவு செய்வதற்கு போதிய ஈரம் இல்லாத நிலை இனி இருக்காது என்பது அவர்களது நம்பிக்கை. அந்தளவிற்கு போதியளவு மழைவீழ்ச்சி அவதானிக்க முடிந்தது.
வடகீழ் பருவக்காற்றின் ஆரம்பம்
பொதுவான காலநிலை அவதானிப்பின் படி ஒவ்வொரு பருவ மழைக்காலம் ஆரம்பமாகும் போதும் இடி முழக்கத்தோடு மின்னல் அச்சத்தை கொடுத்து மழை பொழிய ஆரம்பிக்கின்றது. இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்று வடகீழ் பருவக்காற்று என அழைக்கப்படுகின்றது. இந்த காற்றால் வடபுலம் உள்ளிட்ட இலங்கையின் நிலங்கள் அதிக மழையைப் பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உகைப்புச்சுற்றோட்ட மழை
வளிமண்டல படையடுக்குகளில் வெப்ப இடமாற்றத்தை இந்த மழை ஏற்படுத்தி விடும்.இதனால் இது உகைப்பு மழை என பரவலாக அழைக்கப்படுகின்றது. பாயிகளினூடான வெப்ப இடமாற்றல் செயற்பாடு உகைப்பு என அழைக்கப்படும் என விஞ்ஞானப்பிரிவு ஆசிரியரிடம் கேட்ட போது கருத்துரைத்தார். இப்போது இலங்கையின் வடக்கே ஆரம்பித்திருக்கும் மழையானது சீரான பொழிவொழுங்கை பேணும் என்று மேலும் தெரிவித்தார். மேலும், பகல் வேளை வானம் தெளிவாக இருப்பதோடு அதிக வெப்பத்தையும் கொண்டிருக்கும். மாலை வேளையில்( நண்பகல் 2 மணியின் பின்னர்) அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும். இரவு எட்டு மணியின் பின்னர் வானம் முகில்களற்ற தெளிந்த வானமாக மாறிவிடும் எனவும் விளக்கியுள்ளார். இந்த தொடர்ச்சி பெரும்போக மழை ஆரம்பம் வரை நீண்டு செல்லலாம் என விவசாயிகள் கூறியிருந்தனர்.