மருத்துவர் ஒருவர் கேரளா மாநிலத்தில் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையிலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கேரளாவில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்கே உள்ள மருத்துவமனையில் இன்று 23 வயதான பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி கொடூரமாகக் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவரைக் கொலை செய்த அந்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆவார். இது குறித்து கொட்டாரக்கரா போலீசார் கூறுகையில், “இந்த கொடூர கொலையைச் செய்தது சந்தீப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சிகிச்சை பெற அவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், மருத்துவர் வந்தனா தாஸ் காயத்திற்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அதன் போது திடீரென ஆத்திரமடைந்த குற்றவாளி, கத்தரிக்கோலை எடுத்து அங்கு இருந்த அனைவரையும் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவர் வந்தனா தாஸ் படுகாயமடைந்த நிலையில், அவர் சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலை அந்த மருத்துவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த நபருடன் வந்த போலீசாரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அந்த மருத்துவர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மருத்துவரின் மரணத்திற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.