நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை
இலங்கையில், பணவீக்கம் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது நிச்சயமற்றது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். தற்போதைய 1.6 சதவீத பணவீக்கத்தின் கீழ் கூட மக்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அளவுகள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாகவும், மேலும் அதிகரிக்க எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட 97 வகையான பொருட்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 18 சதவீத புதிய VAT விதிக்கப்படவுள்ளதுடன், ஏனைய பொருட்களுக்கான வரியும் 3 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். இந்த வரி விதிப்பினால் இலங்கை மத்திய வங்கியின் பணவீக்கத்தை 5 வீதமாக பேண முடியுமா என்பது சந்தேகம் என கூறும் பேராசிரியர் மேலும் 5 வீதம் பணவீக்கம் ஏற்பட்டாலும் மக்கள் அதை சமாளிப்பது கடினம். எனவே, தற்போதைய பணவீக்க அளவை 1 சதவீதமாக குறைக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.