ஆன்மிகம்

அம்மனை இரவு நேரத்தில் வழிபட்டு செல்லும் நாகம்!

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் வந்துவிட்டாலே திருவிழாதான். அதுவும் மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை அதிகரித்திருக்கும். அக்கோவிக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பாம்பு புற்றில் பால் ஊற்றி வழிபாடு செய்துவிட்டு செல்வார்கள். ஆடி மாதம் தவிர்த்து பாம்பு புற்றுக்கு 20 முட்டைகள் ஊற்றி வழிபாடு செய்து வந்த பக்தர்கள் ஆடி மாதத்தில் தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றி வழிபாடு செய்து வருகிறார்களாம். இக்கோவிலைத் தவிர மற்ற நாகர் கோவில்களிலும் பக்தர்கள் நூற்றுக்கணக்கான பால் பாக்கெட்டுக்களை கொண்டு வந்து பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இவ்வாறு மயிலாப்பூரில் முண்டகக்கன்னி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பின்புறத்தில் ஆல மரம் உள்ளது. இந்த ஆல மரப்பொந்தில் ஒரு புற்று உள்ளது. இந்த புற்று நாக வடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புற்றில் இருக்கும் நாகம் இரவு நேரத்தில் யாரும் இல்லாதபோது வெளியே வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக சொல்லப்படுகிறது. பாம்பு அம்மனை வந்து வழிபட, கோவில் நிர்வாகம் கருவறையில் ஓலைக்குடிசை அடிப்பகுதியில் ஆங்காங்கு ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த வழியாக வந்து நாகம் அம்மனை வழிபட்டு செல்வதாக கூறுகின்றனர். சிலர் கண்களுக்கு மட்டும் அந்த நாகம் தென்படுமாம். அடுத்த ஒரு வினாடி அந்த நாகம் கண்டுபிடிக்க முடியாதபடி மறைந்துவிடுமாம். கோவில் ஊழியர்கள் அந்த நாகத்தை பலமுறை பார்த்திருக்கிறார்களாம். ஆனால், அந்த நாகம் யாரையும் அச்சுறுத்தாதாம். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள் முண்டகக்கன்னி அம்மன் கோவிலுக்கு வந்து அங்குள்ள நாக புற்றிற்கு பால் ஊற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் நீங்கிவிடுமாம். இக்கோவிலின் வலதுபுறம் மூலவர் கருவறை உள்ளது.

Back to top button