யாழில் ஹோட்டல் உரிமையாளர் மீது பெண்கள் சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தனிப்பட்ட பகை காரணமாக இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு இந்த நாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்றிவு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் , ஹோட்டல் கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.