தமிழர்களின் காணிகள் 1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் ! ஜனாதிபதி ரணிலின் நற்செய்தி

இலங்கையில், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறிலங்காவின் அதிபரான தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் தமிழ் மக்களும் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் குறித்து பாரியளவில் பேசப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அண்மையில் இந்தியா விமர்சித்திருந்ததோடு, தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பான முன்னேற்றம் போதுமானதாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தது.
இதனை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க, இந்தியா இவ்வாறானதொரு கூற்றை முன்வைத்தமை குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அனைவராலும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த செயல்முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், குறித்த செயல்முறை இடைநிறுத்தப்படாது முன்னெடுக்கப்படுமென ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அதேவேளை, எதிர்வரும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் வளமிக்க மாகாணமாக மாறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.