எண் 9 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!
எல்லா எண்களுக்குமே தனித்தனி குணங்கள் உள்ளன. எண்கள் என்று கூறும்பொழுது ஒரு சிலர், அது வெறுமனே எண்கள்தானே என்று நினைப்பார்கள். ஆனால், நாம் பிறந்த எண்கள் என்பன நிச்சயம் நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் 9ஆம் எண்ணில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்…
பொதுவான குணங்கள்
தன்மானம், கோபம், ரோஷம் ஆகிய குணங்கள் சற்று அதிகமாகவே காணப்படும். மன தைரியமும் துணிவும் கொண்டவர்கள். எந்தத் துறையாக இருந்தாலும் பெரும்பாலும் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அன்பு, பாசத்தை தவிர இவர்களை எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. எதிலும் போராடி அதில் வெற்றி காண்பார்கள். ஆனால், வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டத்திலேயே செல்லும். அனைவரும் தனக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாய்நாடு, மொழி மீது அதிக மதிப்பும் பற்றும் உடையவர்களாக இருப்பர். உழைப்பில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பர். மற்றவர்கள் இவர்களை பாராட்டுவதை பெரிதும் விரும்புவர். தங்களது கருத்துக்கள், எண்ணங்கள் என்பவற்றை அனைவரும் ஏற்று நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
9ஆம் திகதி பிறந்தவர்கள் – ஏனையோரை அடக்கி ஆளும் குணம் படைத்தவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உறவினர்களிடம் அடிக்கடி சண்டை போடுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
18ஆம் திகதி பிறந்தவர்கள் – இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பேச்சுத் திறமை அதிகமாக இருக்கும். ஒருவரது எச்சரிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருக்கும்.
27ஆம் திகதி பிறந்தவர்கள் – இவர்கள் தீட்டும் திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். எந்த காரியத்தையும் நன்றாக யோசித்தே செய்வார்கள். சமுதாயத்தில் இவர்களுக்கு செல்வாக்கு உண்டு. வெற்றியை எளிதில் தட்டிப் பறித்துக் கொள்வார்கள்.
குடும்பம் சகோதரர்கள் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தாயின் ஆதரவு சற்று குறைவாகவே கிடைக்கும்.
நட்பு வட்டம் 3,6,9 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த நண்பர்களாக இருப்பர். அதேபோல் 2,8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
தொழில் சினிமா, நாடகம், தொலைக்காட்சித் துறை, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சமூகப் பணிகளையும் மேற்கொள்வார்கள். விளையாட்டுத் துறை, கட்டிடத் துறை, மின்சாரத் துறை, தச்சு வேலை போன்றவையும் வெற்றியளிக்கும்.
திருமணம் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும் ஆர்வமும் உடையவர்கள். திருமண வாழ்வின் ஆரம்பத்தில் பல துன்பங்களை கடந்ததன் பின்னர் புரிதல்களும் மாறுதல்களும் ஏற்படும். நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணையைப் பெற்றுக்கொள்வார்கள். முன்கோபம் சற்று அதிகம் என்பதால் அவ்வப்போது பிரச்சினைகள் வந்து செல்லும். எது எவ்வாறெனினும் தனது வாழ்க்கைத் துணையை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள்.
அதிர்ஷ்டமான தினங்கள் 9,18,27 ஆகிய நாட்களும் 6,15,24 ஆகிய நாட்களும் சிறப்பானவை எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் இந்த தினங்களில் செய்யலாம். அதேபோல் 2,11,20,29 ஆகிய தினங்களில் எந்தவொரு காரியமும் செய்யக் கூடாது.
அதிர்ஷ்ட நிறம் நீலம்,சிவப்பு,கருஞ்சிவப்பு போன்றவை அதிர்ஷ்டமான நிறங்கள். கருப்பு,வெள்ளை,கரும்பச்சை போன்றவை துரதிர்ஷ்டமானவை.