நாட்டில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் 55 வயது நிறைவடைந்துள்ள மற்றும் 20 வருட அரச சேவையிலுள்ள அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைமையொன்றை தயாரிப்பதற்காக அரச சேவை இணைப்பு செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக்கவின் தலைமையிலான 06 பேர் கொண்ட இக்குழுவின் அறிக்கை மூலம், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஊழியர்களை நியமிப்பதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தியிருந்த முறைமை ஒழிக்கப்படவுள்ளது.
இதற்குப்பதிலாக அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைந்ததான வெற்றிடங்களை நியமிப்பது தொடர்பில் புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களுக்காக விசேட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள அதிகாரிகளை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன . நிறுவனம் ஒன்றுக்காக ஒரு அதிகாரியை மாத்திரம் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு அந்தக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் இடமாற்றங்களை மேற்கொள்ளும்போது, தாம் நிரந்தரமாக வசிக்கும் பிரதேசத்துக்கு இடமாற்றம் பெறுவதற்கான முன்னுரிமையை வழங்குவதற்கும் அந்தக்குழு யோசனை முன்வைத்துள்ளது.