லண்டன்

கிம்- புடின் சந்திப்பு தொடர்பில் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி

வட கொரிய ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டுள்ள விடயம், உலக நாடுகள் பலவற்றை பதற்றமடையச் செய்துள்ளது எனலாம்.
உலக நாடுகளின் பதற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக ரஷ்யா வந்துள்ளார், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன். இந்த இருவருடைய சந்திப்பு, பல நாடுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அதற்குக் காரணம், உக்ரைன் போர். சும்மாவே அணு ஆயுத அணிவகுப்புகளும், சோதனைகளும் நடத்தி பெருமைபட்டுக்கொள்பவர் வட கொரிய ஜனாதிபதி கிம். இந்நிலையில், கிம் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்துள்ளதால், அவர் ரஷ்யாவுக்கு ஆயுதங்களைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி கிம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களைக் கொடுப்பாரானால், அது போரின் போக்கை மாற்றலாம். அல்லது போரின் தீவிரத்தை அதிகரிக்கவும் செய்யலாம். ஆகவேதான், உலக நாடுகள் பல கிம், புடின் சந்திப்பைத் தொடர்ந்து பதற்றமடைந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்கவேண்டாம் என்று பிரித்தானியா வட கொரிய ஜனாதிபதி கிம்மை வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவுடனான ஆயுத பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறும், வட கொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டோம் என அளித்த வாக்கை காப்பாற்றுமாறும் நாங்கள் வட கொரியாவை வலியுறுத்துகிறோம் என, ஊடகவியலாளர்களுக்குப் பேட்டியளித்த, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு, உலக அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று கூறியுள்ள அவர், புடினுடைய சட்ட விரோத உக்ரைன் ஊடுருவலுக்கெதிராக உலகமே ஒன்றிணைந்துள்ள நிலையில், புடின் வேறு வழியில்லாமல் வட கொரியா போன்ற நாடுகள் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Back to top button