இலங்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை!

அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பொன்று பறிபோகும் சாத்தியம் இருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி அரச ஊழியர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், அந்நியச் செலாவணி நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்தபோது அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையுடன் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்ய அரசாங்கம் வழங்கியது. குறித்த அரச ஊழியர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களின் சேவை மூப்பு அல்லது ஓய்வூதிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. நிதிச் செலவினங்களைக் குறைப்பதற்கும், அந்நியச் செலாவணி வரவுகளை அதிகரிப்பதற்கும் ஒரு வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவேகமானதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இது மிகவும் திறமையான மற்றும் தகுதியான ஊழியர்கள் வெளிநாட்டு வேலைக்காக அரச சேவையை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது.

ஆகவே, அரச சேவையில் குறைந்த செயற்திறன் கொண்ட மற்றும் தகுதி குறைந்த ஊழியர்களே எஞ்சுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள், ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெறுவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளனர். சிறப்பாக செயற்படும் அதிகளவான அரச ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது அரச சேவையை பலவீனப்படுத்தக்கூடும். எனவே, இந்த தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button