ஜனாதிபதி 13 ஆம் திருத்தம் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளார். இதன்படி, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்தும் வகையில் அது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார். இந்த அறிக்கையில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படும் என்பது தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார். 13வது அரசியலமைப்பை நடைமுறைபடுத்த ஜனாதிபதி முயற்சித்து வருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாதமையே ஜனாதிபதியின் பணிகளுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.