யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! களத்தில் சுமந்திரன் – மாவை: இராணுவம் குவிப்பு
யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று(04.05.2023) நேரில் சென்று கலந்துரையாடியுள்ளனர். களத்தில் சுமந்திரன்-மாவை இதன்போது சட்டவிரோதமாக தையிட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் விகாரையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா பார்வையிட்டுள்ளனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
இராணுவம் குவிப்பு
இந்நிலையில் தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.