தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம்(29.02.2024) திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ” கடந்தமாதம் 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம்.
இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனை. இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.
இதன்படி வழக்கானது எதிர்வரும் ஏப்ரல்,05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து மேலதிக முடிவை எடுப்போம்.” என்றார்.
மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.