தேர்தல் ஆண்டில் அதிகாரப்பகிர்வா ? தமிழ்த் தலைவர்கள் கேள்வி தன் மீதான நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நிபந்தனை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டில் அதிகாரங்கள் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளமையானது ஆச்சரியமளிப்பதாகவும் தேர்தல் ஆண்டில் அதிகாரப்பகிர்வுக்கான செயற்பாடுகள் சாத்தியமா எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், அவர்கள் கடந்தகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்காத நிலையில், அவர் தன்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நிபந்தனைகள் சிலவற்றையும் முன்வைத்துள்ளனர்.
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு இருநாள் விஜயத்தினை மேற்கொண்டு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றியபோது அடுத்தாண்டு அதிகாரங்களைப் பகிரவுள்ள தாகவும்13ஆவது திருத்தச்சட்டத்தினை முன்னெடுப்பதற்கு அர்ப்பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்தவை வருமாறு,
சேனாதிராஜா
மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்குச் செல்கின்றபோது அதிகாரப்பகிர்வு சம்பந்தமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். அது அவருடைய அரசியல் உள்நோக்கத்தினை வெளிப்படுத்துகின்றது.
எம்மைப்பொறுத்தவரையில், அவர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் தீர்வினை அடைய வேண்டும் என்ற விடயத்தில் அக்கறைகளை வெளிப்படுத்தியிருந்தார். 2015இல் பிரதமராக இருந்தபோது இடைக்காலஅறிக்கையொன்றை உருவாக்குவதற்கும் அவர் செயற்பட்டார்.
தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும் எம்முடன் அவர் பலசுற்றுப் பேச்சுக்களை முன்னெடுத்து வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும், இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
ஆகவே, தேர்தல் ஆண்டாக உள்ள அடுத்த வருடத்தில் அதிகாரப்பகிர்வு சாத்தியமாகுமா என்ற கேள்விகள் எமக்குள்ளன. எனவே அவர் எம்முடன் முதலில் பேச்சுவார்த்தைகக்காக நேரடியாக பங்கெடுக்க வேண்டும். அதில் அவருடைய தெளிவான நிலைப்பாட்டை குறிப்பிட்டு வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் அந்த நிலைப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
விக்னேஸ்வரன் எம்.பி
சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பகிர்வினை செய்வதறாக கூறுகின்றார். ஆனால் தொடர்ச்சியாக காலதாமதமாகின்றது. எனவே அவர் வாக்குறுதி அளித்தவாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். அந்த விடயத்தில் இதயசுத்தியுடன் நடந்துகொண்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.
அதிகாரங்களை பகிர்வதற்கு முன்னதாக, செய்ய வேண்டிய சில விடயங்கள் பற்றி நாம் அவருக்கு எழுத்துமூலமான ஆவணத்தின் ஊடாக தெளிவு படுத்தியிருந்தோம். அந்த ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், தற்போதுவரையில் அந்த உறுதிமொழியானது செயல்வடிவம் பெறவில்லை. குறிப்பாக மாகாண ரீதியான நிறைவேற்று ஆலோசனை சபையை நிறுவி அதன் ஊடாக அதரிகாரங்களைப் பயன்படுத்துவதில் காணப்படுகின்ற நடைமுறைரீதியான விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
அவ்விதமானதொரு செயற்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கின்றபோது அவர் மீதான நம்பகத்தன்மை ஏற்படுவதற்கு எம்மத்தியில் வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கே அவரால் இழுத்தடிப்புக்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், எவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கின்ற செயற்பாட்டை அவர் மேற்கொள்வார் என்பது எம்மத்தியில் ஏற்படுகின்ற பாரிய கேள்வியாகும். அடுத்தவருடமாகின்றபோது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் அவர் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவே அதிகாரப்பகிர்வு விடயத்தினை கையிலெடுத்துள்ளார் என்றார்.
சித்தார்த்தன் எம்.பி
சித்தார்த்தன் தெரிவிக்கையில், எம்மைப்பொறுத்தவரையில், அதிகாரப்பகிர்வினை அடைவதே எமது இறுதி இலக்காகும். அதற்காக சாத்தியப்படக்கூடிய அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவதற்கு தயாராகவே உள்ளோம். ஆனால் அதிகாரப்பகிர்வு விடயத்தினை ஜனாதிபதி அடுத்த ஆண்டை மையப்படுத்தி வெளிப்படுத்தி வருவது சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களினது வாக்குகளை மையப்படுத்தியதொரு பிரசாரமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. உண்மையிலேயே ஜனாதிபதிக்கு அதிகாரப்பகிர்வு சம்பந்தமான திறந்த வெளிப்படைத்தன்மையுடனான மனோநிலை இருக்குமாக இருந்தால் அவர் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியைக் கோரி நாட்களை இழுத்தடிப்பதில் நியாயமில்லை.
திவிநெகும சட்டமூலத்தின் ஊடாகவே பாராளுமன்றத்தின் மூலமான மாகாணங்களுக்கான அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன. அதுஉள்ளிட்ட பாராளுமன்றத்தின் ஊடாக பெறப்பட்ட அதிகாரங்களை மீள ஒப்படைப்பதற்கு தேவையாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கு மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியைக் கோருவதில் யதார்த்தமில்லை என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பகிர்வினை அடுத்த ஆண்டுக்கு நகர்த்தியுள்ளார். இதற்கான காரணம், ஜனாதிபதித் தேர்தல் என்பது வெளிப்படையான விடயமாகும். அவர் அதிகாரப்பகிர்வு விடயத்தினை மையப்படுத்துவதன் உடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதுகின்றார்.
மட்டக்களப்புக்குச் சென்றிருந்த அவர், மயித்தமடு மாதவனை பண்டையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவில்லை. அவர் அந்தப் பண்ணையாளர்களை கொழும்புக்கு அழைத்துப் பேசுவதாக கூறுகின்றார். ஆனால் தற்பொது மழையுடனான காலநிலை ஆரம்பமாகிவிட்டது. விவசாயிகள் விதைப்புக்காக எதிர்பார்த்துள்ளனர். ஆகவே பண்டையாளர்களின் விடயம் எவ்வளவு முக்கியமானது என்பதை அவரால் உணர்ந்துகொண்டு உரிய தீர்வொன்றை வழங்க அவரால் முடிந்திருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தான், தற்போது அதிகாரப்பகிர்வு விடயத்தினை முன்வைத்துள்ளார். தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை தொடர்பில் அவர் யதார்த்தமான சிந்தனையைக் கொண்டிருப்பவராக இருந்தால் முதலில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்க வேண்டும்.
ஜேர்.ஆர்.அரசாங்கத்தில் ஆறிலைந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட அத்திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கு மீண்டும் பாராளுமன்ற அனுமதியைக் கோருவது வேடிக்கையாகும். ஆகவே அவர் முதலில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஆமுலாக்கி ஆகக்குறைந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த வேண்டும். அதன்போது தான் அவருடைய அதிகாரப்பகிர்வு சம்பந்தமான கருத்து தொடர்பில் நம்பிக்கைக்கான சமிக்ஞை ஏற்படும் என்றார்.
Source : virakesari.lk