இவர்கள் அமாவாசை விரதத்தை எடுக்க கூடாதாம்
நாம் வானியல் சாஸ்திரப்படி சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளை அமாவாசை என்கிறோம். ஜோதிட சாஸ்திரப்படி சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர் காரகன் என்றும் அழைக்கிறோம். அதனால் தான் அமாவாசை நாளில் மறைந்த தாய், தந்தைக்கு செய்ய வேண்டிய கடனாக தர்ப்பணம் செய்கிறோம். இதனால் நாம் செய்த பாவங்கள், முன்னோர்களின் சாபங்கள் நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. திதிகளில் அமாவாசை திதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவதற்கு மிகச் சிறந்த திதியாக அமாவாசை திதி உள்ளது. சந்திரன் முழுவதுமாக தேய்ந்து மறைந்த நாளாக அமாவாசையை பலர் கருதுகிறார்கள். ஆனால் சந்திரன் வளர்பிறையாக வளர துவங்கும் நாள் என்பதால் அமாவாசையில் எந்த காரியத்தை துவங்கினாலும் எது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு ஏற்ற நாளாக அமாவாசை கருதப்படுகிறது. வருடத்திற்கு மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவற்றில் கண்டிப்பாக பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை என்பது நமது முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டும் நாளாகும். இதனால் தான் ஆடி மாதம் என்பது தட்சணாயன காலம் என சொல்லப்படுகிறது.
மேலும், மகாளய அமாவாசையில் நமக்கு ஆசி வழங்க பித்ருக்கள் பூமிக்கு வரும் நாளாகவும் தை அமாவாசை என்பது பித்ருக்கள் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்படும் நாளாகவும் சொல்லப்படுகிறது. தட்சணாயன காலத்தின் துவக்கமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி, நீர் நிலைகளுக்கு அருகில் தர்ப்பணம் கொடுத்து, தானம் கொடுப்பது முன்னோர்களின் மனங்களை மகிழச் செய்து நம்முடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி, நம்முடைய சந்ததிக்கே முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரக் கூடியதாகும்.
அமாவாசை விரதம் அன்று செய்ய வேண்டியவை
பொதுவாகவே அமாவாசை என்றால் வீட்டை சுத்தம் செய்து விரதம் இருந்து, காகத்திற்கு உணவு வைத்த பிறகு நாம் உணவு சாப்பிடுவது தான் வழக்கம்.
மற்ற எந்த ஒரு விரதமும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அமாவாசை விரதம், குறிப்பாக ஆடி அமாவாசை விரதம் எல்லோரும் இருக்க கூடாது.
தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
ஆடி அமாவாசை அன்று விரதம் எடுக்க வேண்டியவர்கள்
கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆகியோர் ஆடி அமாவாசையில் விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்க கூடாதவர்கள்
கணவன் உயிருடன் இருக்கும் போது இறந்து போன தனது தந்தை, தாய் அல்லது தாய், தந்தைக்காக திருமணமான ஒரு பெண் ஆடி அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
சுமங்கலி பெண்கள் ஆடி அமாவாசை விரதம் இருக்கக் கூடாது. அவரின் கணவர் மட்டுமே மறைந்த தனது பெற்றோர்களுக்காக விரதம் இருக்க வேண்டும்.
திருமணமான பெண் இறந்து போன தனது பெற்றோரை நினைத்து அமாவாசை நாளில் தானம் கொடுக்கலாம், யாராவது நான்கு பேருக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம்.
ஆனால் விரதம் இருப்பதோ, தர்ப்பணம் கொடுப்பதோ கூடாது.
அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்த பெண்ணிற்கு உடன் பிறந்த ஆண்கள் இல்லை என்றால் அப்போது தனது பெற்றோர்களுக்காக அந்த பெண் தர்ப்பணம் கொடுக்கலாம்.