இலங்கை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஆயிரக்கணக்கான கார் மற்றும் வான்கள்: வெளியான தகவல்

இலங்கைக்கு சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாணடோ தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம். கடந்த 15 – 20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அத்துடன் வாகனங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. எனவே, புதிய கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என நம்புகிறோம்.

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வாகன இறக்குமதி தொடர்ந்தும் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன் தினம் (20.2.2024) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வாகனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை வாகனங்கள் தேவை என்பவற்றை தீர்மானிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அண்மைக் காலத்தில் 29 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button