டிஜிட்டல் யுகத்தில் டுவிட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ்! மகிழ்ச்சியில் பயனர்கள்
எதிர்வரும் 6ஆம் திகதி டுவிட்டருக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது.
மேலும், இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகபெரும் பணக்கரரான எலான் மஸ்க், கடந்தாண்டு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் டிவிட்டரில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா என சென்றதுடன் அண்மையில் டுவிட்டர் பயனர்கள் டுவீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது. அதே நேரத்தில் டுவிட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் , முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் டுவிட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.
குறித்த தளம் டுவிட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம். இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6ஆம் திகதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. இது குறித்து டுவிட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி டுவீட்டில்ல் ‘உங்களது த்ரெட்ஸ் எங்களுக்கு சொந்தமானது’ என கூறியுள்ள நிலையில் ‘எப் பிரைவசி’ சார்ந்த தகவலையும் ஸ்க்ரீன் ஷோட்டாக பகிர்ந்துள்ளார்.