கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகவீனமடைந்ததையடுத்தமையினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் விரைந்து செயற்பட்ட பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக 70 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பேருந்தில் திடீரென சுகவீனமடைந்த சாரதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த சமிந்த பிரபாத் சரத்சந்திர என்ற 49 வயதுடையவர் எனவும் அவர் பேருந்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி நிலாந்தி நிலவலவினால் சடலத்தின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தின் போது பேருந்தில் பயணித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி துஷார பிரதீப் வீரகோன் கூறியதாவது, பேராதனை போதனா வைத்தியசாலை “மாலை வேலை முடிந்து சுமார் 6.40 மணியளவில் பேராதனையிலிருந்து பேருந்தில் ஏறினேன். பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன, சுமார் 30 பேர் நின்று கொண்டிருந்தனர். திடீரென அலறல் சத்தம் கேட்டது. முன்னால் சென்று பார்த்தபோது சாரதி ஆசனத்தில் இருந்தவர் ஒரு பக்கம் சாய்ந்து கிடப்பதை பார்த்தேன். அவரது கட்டுப்பாட்டை மீறி பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது. இதன் போது பேருந்தில் இருந்த ஒருவர் வந்து சாரதி இருக்கையை நோக்கி சாய்ந்து பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். பேருந்தில் ஒரு மருத்துவரும் பயணித்த நிலையில் அவர் அடிப்படை சிகிச்சை அளித்து, நோயாளியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
முச்சக்கரவண்டியில் அவரை பேராதனைக்கு அழைத்து வந்தேன். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. இந்த பேருந்து கடுகன்னாவ வளைவுக்கு அருகில் சென்றடைந்த போது ஓட்டுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். சரியான நேரத்தில் பயணி எடுத்த நடவடிக்கையால் 70 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.