பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் “ஷீரடியில்” வாழ்ந்து, முக்தி அடைந்த “ஸ்ரீ சாய் பாபாவைப்” பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது. இவரது அருளால் தங்களின் பல கஷ்டங்கள் தீர்க்கப்பட்டு மகிழ்வோடு இருக்கும் பக்தர்கள் கோடான கோடி பேர். அப்படி மக்களுக்காக மக்களுடன் வாழ்ந்து முக்தியடைந்த பாபா தன் பக்தன் ஒருவனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சம்பவத்தைப் பற்றி இங்கு காண்போம். ஒரு சமயம் “ஷீரடி” மசூதியிலிருக்கும் “சாய் பாபாவை” தரிசிப்பதற்கு, அவருக்கு முன்னேமே நன்கு பரிட்சயமான ஒரு பக்தை வந்தார். சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா, அவரிடம் இன்று மதியம் அவர் வீட்டிற்கு ஒரு “எருமைமாடு” விருந்தாளியாக வரப்போவதாகவும், ஆதலால் அது உண்ண “போளிகளை” தயாரிக்குமாறு கூறினார். அதை ஏற்ற அந்த பக்தையும் சாய் பாபா கூறியவாறே, போளிகளை தயார் செய்து வைத்து அந்த எருமைமாட்டிற்காக காத்திருந்தார்.
சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அதைக்கண்டதும் அந்த பக்தை, சாய் பாபா கூறிய வாறே அனைத்து போளிகளையும் அந்த எருமைக்கு உண்ணக் கொடுத்தார். அதையெல்லாம் உண்டு முடித்ததும் அந்த எருமை அங்கிருந்து, சற்று தூரம் நடந்து சென்று கீழே விழுந்து இறந்தது. இதைக் கண்டதும் அந்த பக்தை திடுக்கிட்டு, நேரே சாய் பாபாவிடம் சென்று இவ்விஷயத்தை கூறினார்.
அதைக் கேட்ட சாய் பாபா, “இறந்த அந்த எருமை மாடு அதன் முற்பிறவியில் தனது பக்தனாக இருந்ததாகவும், அப்பிறவியில் அந்த பக்தன் இறக்கும் தருவாயில் அவனுக்கு மிகவும் பிடித்த “போளிகளை” உண்ணமுடியாத ஏக்கத்தோடு இறந்து போனதாகவும், இப்போது எருமைமாடாக பிறவியெடுத்திருக்கும் தன் பக்தனின் ஆசையை தான் நிறைவேற்றியதால், அந்த ஆசை நிறைவேறிய மனதிருப்தியோடு அந்த எருமை இறந்து விட்டதாக” கூறினார். இதைக் கேட்ட அந்த பக்தை “எல்லோரின் இம்மையையும், மறுமையையும் அறிந்தவரான” சாய் பாபாவின் கருணையை எண்ணி அவரை உள்ளன்போடு வணங்கினார்.