சாய் பாபா பிட்சை எடுத்து பாவத்தை நீக்கிய உண்மை சம்பவம்
ஷீரடி கிராமத்து மக்களுக்கு ஒருநாள் காலையில் ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் பதினாறு வயதே நிரம்பிய ஓர் இளைஞர் தியானத்தில் அமர்ந்தநிலையில் காட்சி தந்துகொண்டிருந்தார்.
அவர் எந்த நேரத்திலும் அமைதியை இழக்கவில்லை. அவரின் முகம் சாந்தம் நிறைந்ததாக இருந்தது. இரவு, பகல் எல்லா நேரமும் அவர் தியானத்திலேயே இருந்தார். புயலோ, மழையோ எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. ஷீரடி மண்ணும், அதில் வளர்ந்த புல், செடி, கொடிகளும் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவை. எவ்வித முயற்சியும் இல்லாமலேயே அவற்றுக்கு பாபாவின் ஸ்பரிசம் மிக எளிதாகக் கிடைத்தது.
பலரும் பாபா என்ற அந்த இளைஞரைக் கண்டாலும், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த இளைஞர் தெய்வாம்சம் பொருந்திய மகான் என்பதைத் தெரிந்துகொண்டனர். மற்றவர்களையும் அந்த இளைஞரின் அழகும் தேஜஸும் நிரம்பிய தோற்றம் கவரவே செய்தது. அவர்களுள் பாயாஜா பாய் என்ற பெண்மணியும் ஒருவர். பாபாவைப் பார்த்த மாத்திரத்தில், பாயாஜா பாயின் மனதுக்குள் தாய்மை அன்பு சுரந்தது.
ஷீரடிக்கு பாபா வந்து சேர்ந்த ஆரம்ப நாள்களில் ஓர் இஸ்லாமியப் பெண்மணி அவருக்கு உணவளித்து வந்தாள். பின்னர் பாபா உணவை பிட்சையெடுக்கத் தொடங்கினார். அப்படி பிட்சையெடுத்து வந்த உணவை, தான் மட்டும் உண்ணவில்லை. நாய், பூனை போன்ற ஜீவன்களும் பாபா உண்ணும்போது அவருடைய பாத்திரத்திலிருந்தே உணவை எடுத்து உண்டன. பாபாவும் அந்த ஜீவன்களைத் தடுக்கவில்லை. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனையே கண்ட ஒப்பற்ற மகான் அவர். அனைத்து ஜீவன்களையும் தம்மைப்போலவே நேசித்த பாபாவின் நடைமுறைகள் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருந்தன.
அவர் பிட்சை எடுக்கும் முறைகளும் அப்படியே இருந்தன. பாபா, சில நாள்களில் சில வீடுகளில் மட்டும் பிட்சை எடுத்தார். சில நாள்களில் மதியம் வரை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் எல்லோர் வீடுகளிலும் பிட்சை கேட்பதில்லை. யாராவது தாமாக முன் வந்து அளிக்க நினைத்தாலும் அவர் அதை பெற்றுக்கொள்வதில்லை. அவர் உணவை பிட்சையாக எடுத்ததன் மூலம் அவர்களின் பாவங்களை வாங்கிக் கொண்டார். அவருக்கு உணவளித்தவர்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் இல்லத்திலிருந்தபடியே, இல்லறக் கடமைகளைச் செய்தபடியே தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர்.
ஷீரடியில் திருமதி பாயாஜா பாய் என்ற பெண்மணி ஒருவர் இருந்தார். இவர் பாபாவைத் தன் மகனாகவே கருதினார். தினமும் மத்தியான நேரத்தில் பாபாவுக்கு கொடுப்பதற்காக, ஒரு கூடையில் பழங்கள், ரொட்டி, காய்கறிகள் போன்றவற்றைத் தன் தலையில் சுமந்துகொண்டு செல்வார். பாபா ஓரிடத்தில் நிற்காமல் திரிந்துகொண்டே இருப்பதால், பாயாஜா பாய் பாபாவைத் தேடி காடுகளில் அலைவார்.
வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு உணவு வழங்குவார். அதற்குப் பிறகே தான் சாப்பிடுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம்மிடம் அந்தப் பெண்மணி கொண்டிருக்கும் அன்பின் மிகுதியால், பாபா அவரைத் தன் தாயாகவே ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரை மேலும் அலையவிட விரும்பாத பாபா, துவாரகாமாயியிலேயே தங்கத் தொடங்கிவிட்டார். பாயாஜா பாய், பாபாவைத் தேடி காடுகளில் அலையும் நிலையும் மாறியது. பாயாஜா பாய் தம்மிடம் கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணமாக அவரைத் தன் தாயாக ஏற்றுக்கொண்டதுடன், அவருடைய மகன் தாத்யாவுக்கு பல வகைகளிலும் அருள் புரிந்திருக்கிறார்.