பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவோருக்கு, அடுத்த ஆண்டு முதல் கடும் அபராதம் விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது. சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு சொந்தக்காரர்களுக்கு 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது அபராதத்தொகை வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே.
இந்நிலையில் ஒரே வீட்டில் பல சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை தங்கவைத்துள்ளது தெரியவந்தால், முதன்முறை ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 10,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. முன்பு இந்த அபராதத்தொகை 1,000 பவுண்டுகளாக இருந்தது. மேலும், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைத்தால், முதன்முறை புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கு 45,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது இந்த அபராதம் 15,000 பவுண்டுகளாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டு அமுலுக்கு வர உள்ள நிலையில், உள்துறை அலுவலகம் அது தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க உள்ளது.
ஆகவே, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அப்படி அவர்கள் நுழைந்துவிட்டாலும், அவர்களுடைய வாழ்வாதாரத்தில் கைவைத்து அவர்களை தண்டிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதுபோல் தெரிகிறது.