அதிவேக நெடுஞ்சாலை பயன்படுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலையில் 1764 வீதி விபத்துக்கள் ஏற்பட்டன. அவற்றில் 13 விபத்துக்களில் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.வி. எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் 25 விபத்துக்கள் பாரதூரமான விபத்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டின் போதுதான் பெரும்பாலான விபத்துகள் நடந்துள்ளன.
நெடுஞ்சாலைகளில் தினமும் சுமார் 90,000 வாகனங்கள் பயணிக்கின்ற நிலையில், புத்தாண்டு காலத்தில் இது 1,40,000 ஆக அதிகரிக்கும். நெடுஞ்சாலைகளை பயன்படுத்துபவர்கள் முதலில் வாகனத்தின் நிலைமையை புரிந்து கொண்டு வீதியில் பிரவேசிக்க வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். போதுமான எரிபொருள் உள்ளதா? வாகனத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் காணப்படுமாயின் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தொலைபேசியில் பேசிக்கொண்டு உல்லாசமாக வாகனம் செலுத்துவது விபத்துக்களை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூக்கம் வருமானால், அருகில் உள்ள பரிமாற்றத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் வீதியில் காட்டப்படும் பலகைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினமும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மீரிகம குருநாகல் அதிவேக வீதிகளில் பெருமளவிலான வாகனங்கள் பிரவேசிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துகளை குறைக்க வாகன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.