உடல்நலம்

உடலுக்கு பலன்களை அள்ளித்தரக்கூடிய ஆட்டுக்கால் சூப் ஏன் குடிக்க வேண்டும்? அதன் நன்மைகள் தெரியுமா?

பலருக்கும் குளிர்காலம் வந்தாலே சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும், சூடாகவும் அதேசமயம் உடலுக்கு பலன்களை அள்ளித்தரக்கூடிய பானமாக இருக்க வேண்டும் என்றால் அதன் முதல் தேர்வு சூப் மட்டுமே. அதிலும் ஆட்டுக்கால் சூப் என்றால் சொல்லவா வேண்டும், சளி இருமல் தொடங்கி எலும்புகளை வலுவடையச்செய்யும் திறன் இதற்கு உண்டு. இந்த பதிவில் ஆட்டுக்கால் சூப் செய்வது குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கால்- 4

வெங்காயம்- 2

தக்காளி- 1

மிளகு- 2 டீஸ்பூன்

மல்லி விதைகள்- 2 டீஸ்பூன்

சீரகம்- 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 2

இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு

மஞ்சள் தூள்- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை

மிளகு, மல்லி விதைகள், சீரகம் போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து கொண்ட ஆட்டுக்காலை வெட்டி எடுத்து போதுமான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 10 விசில் வரை வைத்து வேக வைத்து எடுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும், இதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும், கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயாராகிவிடும்.

பலன்கள்

கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு வலுவடையும். நெஞ்சுசளி, இருமல் பிரச்சினைகள் தீரும். குளிர் காலத்தில் இதை குடித்தால் ஜலதோஷ பிரச்சினை நீங்கும். செரிமான கோளறுகளை குணமாக்கும். எடையை குறைக்க சிறந்த ஒன்றாகும். ஆட்டுக்கால் சூப்பில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பற்களை ஆரோக்கியமாக்கும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Back to top button