இலங்கை நாணயத்தின் மோசமான நிலை : குடும்ப செலவு 85 ஆயிரம் ரூபாவிலிருந்து 1 இலட்சத்து 75ஆயிரம் ரூபாவாக மாற்றம்
பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத செலவு 85 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த தொகை 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது இறுதி வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நான் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி அவர் உரையாற்றியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாடு தற்போது சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறேன்.
நாட்டில் தற்போது எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசை இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கை தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத செலவு 85 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
ஆனால் தற்போது அந்த தொகை 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவுகள் 95 சதவீதமளவில் உயர்வடைந்துள்ள பின்னணியில் தான் நாடு சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் கிடைக்கப்பெற்றுள்ளதையிட்டு நாட்டு மக்களுக்காக மகிழ்வடைகிறோம். பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பொருளாதார படுகொலையாளிகள் தொடர்பில் ஜனாதிபதி ஏதும் குறிப்பிடவில்லை. நாட்டு மக்களால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி பேசுகிறார்.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதா, இல்லையா என்பதை உலகமே தீர்மானிக்கும், எம்மால் தீர்மானிக்க முடியாது. பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அத்துடன் திட்டங்களை செயற்படுத்திக் கொண்டு செல்லும் போது தனித்து விட வேண்டிய நிலை ஏற்படுமா என்றும் குறிப்பிடுகிறார்.
சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் என்பதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
விவசாயத்துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. விவசாயத்துறையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வற் வரியில் உழவு இயந்திரம் முதல் மண்வெட்டி வரையிலான சகல பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.
2048 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 07 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும்.
ஆனால் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதத்தாலும்,2025 ஆம் ஆண்டு 2.7 சதவீதத்தாலும், 2026 ஆம் ஆண்டு 3 சதவீதத்தாலும், 2027 ஆம் ஆண்டு 3.1 சதவீதத்தாலும் அதிகரிக்க கூடும் என அரசாங்கம் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான நிலையில் 2048 ஆம் ஆண்டு பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது. அத்துடன் கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ளார்.