ஏனையவை

வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படுமென எச்சரிக்கை! உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வலியுறுத்தல்

கடன் மறுசீரமைப்பில் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்து விட்டது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என குறிப்பிட்டு அரசாங்கம் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம் என அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு ஆண்டு கால தவணை அடிப்படையில் 2.9 பில்லியன் டொலர் கிடைப்பனவுக்கான சாத்தியம் கிடைத்தவுடன் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐந்தாண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 25 பில்லியன் டொலர் கடன் மீள செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிகளில் பிரதான நிலை கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மறுசீரமைக்கும் விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது.

கடன் மறுசீரமைப்புக்களை அரசாங்கம் தனித்து மேற்கொள்ள வேண்டும். 14 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சகல கடன் வழங்குநர்களும் சமமாக மதிக்கப்படுவார்கள், எவருக்கும் விசேட சலுகை வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகிய அரச வங்கிகள் அரசாங்கத்துக்கு கடன் வழங்கியுள்ளன. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும், இதனால் வங்கி வைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடன் பெறுவது மாத்திரம் ஒரு தீர்வாக அமையாது. தேசிய வருமானத்தை அதிகரித்து கொள்ள பொது கொள்கை திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை முன்னிலைப்படுத்தி உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவதை காட்டிலும் மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் இல்லை.

அரச நிர்வாகத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தவறான தீர்மானங்களையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்கிறார். கடன் பெறுவது, அரச நிறுவனங்களை விற்பது, தேசிய வளங்களை விற்பது ஆகியவையே பொருளாதார மீட்சிக்கான அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button