சுவிட்சர்லாந்து

நாளை வெளியாகும் சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்தலுக்கு மேலும் சிக்கலை உருவாக்கலாம்…

சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், நாளை, ஞாயிற்றுக்கிழமை, தங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் குறித்தும், மக்கள் என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது தெரியவர உள்ளது.பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில், பணப்பிரச்சினை முதலான பல பிரச்சினைகள் நிலவும் நிலையில், அவை குறித்து மட்டுமின்றி, இன்னொரு விடயம் குறித்தும் மக்கள் முடிவு செய்ய விழைகிறார்கள். அது, புலம்பெயர்தல்…

இன்றைய சுழலில், உலக நாடுகள் பலவற்றிற்கு, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர்ந்தோர் தேவைப்படுகிறார்கள். ஜேர்மனி, கனடா போன்ற நாடுகள் அதை வெளிப்படையாகவே கூறுகின்றன.

ஆனால், சில நாடுகளோ, புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்கின்றன. குறிப்பாக, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்து, மக்கள் ஆதரவை ஈர்க்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. ஜேர்மனி போன்ற நாடுகளில், வலது சாரிக்கட்சிகள் சில அதில் வெற்றியும் பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது சுவிட்சர்லாந்தும் சேர்ந்துள்ளது.

ஆம், வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, வெளிப்படையாகவே அதைச் சொல்லியுள்ளது. சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். புகலிட சட்டங்களை கடுமையாக்குவதும், புலம்பெயர்தலைக் குறைப்பதும்தான் அதன் புலம்பெயர்தல் கொள்கைகள்.

புலம்பெயர்தல் குறித்து மக்களை எச்சரிக்கும் அக்கட்சி, வெளிநாட்டவர்கள், காப்பீடு மற்றும் பிற சமூக உதவிகள் பெறுவதன் மூலம், சுவிஸ் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக கருதுகிறது.

புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களை முன்வைத்துள்ள கட்சிகள்
இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி இந்த வார இறுதியில் நடைபெறும் தேர்தலில் வாக்குகளை அள்ளும் என்று கூறியுள்ளார், அக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Christian Imark.

அதற்குக் காரணம், புலம்பெயர்தல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றலுக்கான கட்டண அதிகரிப்பு ஆகியவையே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்துக்கள் என வெளிப்படையாகவே கூறியுள்ளார் அவர். புலம்பெயர்தல் சுவிட்சர்லாந்துக்கு பெரிய தொல்லை என்று கூறும் Imark, புலம்பெயர்ந்தோருக்காக உள்கட்டமைப்புகளையும் வீடுகளையும் அதிகரிக்கவேண்டியுள்ளது என்றும் கூறியிருந்தார்.

ஆக, மக்கள் என்ன முடிவு செய்யப்போகிறார்கள். எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும். சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சுற்றுலா என்றால் இருகரம் நீட்டு வெளிநாட்டவர்களை வரவேற்கும் அந்நாடு, புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் வருகிறார்கள் என்றால், கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது உலகறிந்த விடயம். தேர்தல் முடிவுகள், புலம்பெயர்ந்தோருக்கு மேலும் சிக்கலை அதிகரிக்குமா என்பது நாளை தெரியவந்துவிடும்!

Back to top button