இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மீண்டும் புதிய தெரிவு : தயார் நிலையில் சிறீதரன்

எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் தற்போது நிலவும் குழப்ப நிலை தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 75வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக்கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.

என்னைப்பொறுத்தவரையில், எனது தலைமைத்தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

விசேடமாக கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானித்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன்.

விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.

எவ்வாறானினும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன.

எனவே, அனைத்து தடைகளையும் முறையாக கையாண்டு அவற்றை கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என குறிப்பிட்டார்.

Back to top button