சீனாவுக்கு சவாலாக அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணை
சீனா இந்தியாவின் பலப்பகுதிகளை பிடித்து அணையை கட்டி வரும் நிலையில் இதற்கு இணையான அணையை இந்தியா கட்ட ஆரம்பித்துள்ளது.
சீனாவைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரமாண்ட அணையை கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவும் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணையை வேகமாக கட்டத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தற்போது வரை தங்களுடையதாக கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா தனது கட்டுமானங்களை விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச எல்லையையொட்டியுள்ள பகுதியில் சுமார் 67 கி.மீ தொலைவுக்கு சீனா வீதியை அமைத்தது.
ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கி 2014ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளில் இந்த பிரமாண்டமான வீதியை சீனா கட்டி முடித்திருக்கிறது. 67.22 கி.மீ தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலையானது சீனாவின் நைஞ்சியில் உள்ள பேட் டவுன்ஷிப்பை, மெடோக் கவுண்டியில் உள்ள பைபங் டவுன்ஷிப்புடன் இணைக்கிறது.
இந்த கட்டுமான பணிகளை இந்தியா கடுமையாக எதிர்த்து வந்த போதிலும் சீனா விடாபிடியாக வீதியை அமைத்து முடித்துவிட்டது. இதனையடுத்து தற்போது அடுத்த நகர்வுக்கு சீனா சென்றிருக்கிறது. அதாவது, பிரம்மபுத்திரா நதி உருவாகும் சீன எல்லையில் அமைந்துள்ள திபெத் பகுதியில் சுமார் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் ‘பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கோர்ப்பரேஷன்’ இந்த கட்டுமாணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவது முதல்முறையல்ல. இதற்கு முன்னரே சுமார் ரூ.1.22 இலட்சம் கோடி மதிப்பில் திபெத்தின் ‘ஜாம்’ நீர்மின் நிலையத்தை சீனா கடந்த 2015ம் ஆண்டு கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும். கோடைக்காலங்களில் நீருக்கு பஞ்சமும் மழைக்காலங்களில் அதீத வெள்ளமும் ஏற்படும். எனவே இதனை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதியிலிருந்து சுமார் 30% குடிநீரும், 40% மின்சாரமும் கிடைக்கிறது. ஆனால் இந்த நதியின் 50% பரப்பு சீனாவில்தான் இருக்கிறது. எனவே சீனா தன்னுடைய இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவால் இந்தியா மட்டுமல்லாது வங்கதேசமும் பாதிப்பை சந்திக்கும்
எனவே இதனை தடுக்க இந்தியா ‘லோயர் சுபன்சிரி திட்டத்தை’ கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அப்பர் சுபன்சிரியில் 11,000 மெகாவாட் (மெகாவாட்) மின்சாரம் தயாரிக்கும் விதமாக அணை கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணை கட்டப்பட்டால் சீனா திறந்துவிடும் நீரால் ஏற்படும் வெள்ளத்தை இந்தியாவினால் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
இந்த அணை அசாம் மாநிலத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.