இலங்கை

மன்னார் பேசாலை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தரான 26 வயதுடைய கஸ்டார் அலெக்ஸ் என இனம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதியைச் சேர்ந்த கஸ்டார் அலெக்ஸ் , இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் பேசாலையில் குடும்பத்துடன் தங்கி இருந்து கடந்த சில மாதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த 20 ஆம் திகதி குறித்த மீனவர் பேசாலை கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் படகு மூலம் ( றோலர் ) கடலுக்குள் மாலை 3 மணியளவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.இவருடன் மேலும் இரண்டு மீனவர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் கடலுக்குள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவர்களது தொழிலை மேற்கொள்ளும் டோலர் படகின் பிரதான வலை கிழிந்த நிலையில் அதை சீர் செய்து மீண்டும் தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட தொழிலில் மீன்பாடு இல்லாத நிலையில் இரவு சுமார் 9.30 மணி அளவில் பேசாலை கரைக்கு திரும்பி கடற்கரைக்கு சற்று தொலைவில் படகை நங்கூரமிட்டு குறித்த 3 நபர்கள் நீந்தி கரைக்கு வந்து உள்ளனர்.

இதன் போது ஒருவர் தாமதமாகியும் கரைக்கு வராத நிலையில் காணாமல் போய் உள்ளார்.
குறித்த நேரத்தில் அவரை தேடிய மற்றைய இரண்டு மீனவர்களும் உரிமையாளரிடம் முறையிட்டு பேசாலை போலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேசாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Back to top button