இலங்கையின் முன்னணி நிறுவனத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்!
லங்கா சதொச மறுசீரமைப்பின் கீழ் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், லங்கா சதொசவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிவரும் 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அமைச்சரவையில் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்த நிலையில் சதொச நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த கட்டாய ஓய்வு பிரேரணையின் பிரகாரம் அனைத்து ஊழியர்களுக்கும் செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கியதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மாதாந்த சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த முடிவுக்கு அதன் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சதொச ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.