கனடாவில் சிறப்பாக ஜொலிக்கும் ஈழத்தமிழன்! யார் அவர்?
இலங்கையில் கொழும்பில் பிறந்த ராய் ரத்னவேலின் தந்தை அரசாங்கத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பிரதேசத்தில் குடியேறவும் செய்தார். இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதைக்கு இலக்கான தமிழர் ராய் ரத்னவேல், தாம் கடந்துவந்த பாதையை நினைவு கூர்ந்துள்ளார்.
இதெவேளை, பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இனச்சண்டை உருவெடுத்தது என கூறும் ராய் ரத்னவேல், 1983ல் திட்டமிடப்பட்ட கலவரத்தால் 3,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். 1987 ஜூன் மாதம், இலங்கை இராணுவம் பருத்தித்துறைக்கு வந்து 14 முதல் 40 வயது வரையிலான அனைத்து ஆண்களையும் சுற்றி வளைத்தது. அதில் தாம் சிக்கிகொண்டதாக கூறும் ராய் ரத்னவேல் பல மாதங்கள் கொடூர சித்திரவதைக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளார். அப்போது ராணுவத்திடம் சிக்கிய அனைவரையும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தமிழ் புலிகளின் ஒரு பகுதியினர் என்பதை ஒப்புக்கொள்ள அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தந்தையின் நண்பர் ஒருவரால் சித்திரவதை முகாமில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பிறகு தமது தந்தையின் அறிவுறுத்தலின்படி கனடாவுக்கு புறப்பட தயாரானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.1988 ஏப்ரல் மாதம் கையில் வெறும் 50 டொலர்களுடன் ரொறன்ரோவில் தரையிறங்கியதாக கூறும் ராய் ரத்னவேல், சில மாதங்கள் உறவினர் ஒருவருடன் தங்கியிருந்து, பின்னர் ஸ்கார்பரோ பகுதிக்கு குடிபெயர்ந்ததாக தெரிவித்துள்ளார். பகலில் ஒரு பேக்கேஜிங் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு, இரவில் கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும், வார இறுதி நாட்களில், காவலாளியாகவும் வேலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர்நிலைப் பள்ளியை முடிக்கவும் முயற்சி செய்ததாக ராய் ரத்னவேல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஆண்டுக்கு 14,000 டொலர் ஊதியம் வழங்கும் ஒரு நிறுவனத்தில் விண்ணப்பிக்க, அவர்கள் நிராகரித்ததாக கூறும் ராய் ரத்னவேல், தமது கதையை கூறி அங்கு வாய்ப்பை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு வின்னிபெக் முதல் பிரிட்டிஷ் கொலம்பியா வரை 25க்கும் மேற்பட்டவர்களை நிர்வகிக்கும் மேற்கு கனடாவின் விற்பனைத் தலைவராக நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.