இந்தியாவின் தடை உத்தரவால் மொத்தமாக பாதிக்கப்பட்ட கனேடிய மக்கள்! அவசரத்தில் தவறு செய்யும் சிலர்…
இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள நிலையில், அவசரப்பட்டு தவறான அரிசி வகைகளை வாங்கி சேமிக்க வேண்டாம் என கனேடிய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எந்த வகையான அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது என ரொறன்ரோ பகுதியை சேர்ந்த வணிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் பாஸ்மதி அரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருதி, பெருமளவு பாஸ்மதி அரிசியை வாங்கிக் குவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் இருந்து தங்கள் நிறுவனம் மட்டுமே பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்து வருவதாக கூறும் அவர், அமெரிக்காவில் இருந்தும் சில அரிசி வகைகலை இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளை அரிசிக்கான பற்றாக்குறை இன்னும் சில காலம் நீடிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் வருவதால், இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் பாஸ்மதி அரிசியை தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க தேவையில்லை எனவும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கவே வாய்ப்பாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையானது, கனடாவில் அரிசி விலை அதிகரிக்க காரணமாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர். அரிசி உணவை அதிகம் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட கனடியர்கள் இதன் பாதிப்பை அதிகமாக உணருவார்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகச் சந்தையில் அரிசி மட்டும் தேவைக்கு அதிகமான சேமிப்பு இருக்காது என குறிப்பிடும் நிபுணர்கள், இதுபோன்ற அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகும் போது, அதன் தாக்கம் உடனடியாக உணரப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். உக்ரைன் அரிசி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிக்கொண்ட மூன்றாவது நாள், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்திய மக்கள் உணவு பண்டங்களின் விலை உயர்வால் கடுமையாக தத்தளித்துவரும் நிலையிலேயே அரிசி ஏற்றுமதி தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, சில்லறை விலை கடந்த ஆண்டை விட 11.5 சதவீதமும், கடந்த மாதத்தை விட 3.0 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றே தெரியவந்துள்ளது.