கனடா

கனடாவும் நட்பு நாடுகளும் இந்திய அதிகாரிகள் வகுத்த திட்டம் குறித்து திரட்டிய ஆதாரங்கள்: பூதாகரமாக வெடிக்கும் சீக்கியர் கொலை

கனடாவில் சிக்கிய தலைவர் படுகொலையில் இந்தியாவுக்கு எதிராக ஆணித்தரமான ஆதாரங்கள் கனடா அதிகாரிகள் திரட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள் வகுத்துள்ள திட்டம் மற்றும் உளவு அமைப்புகளின் செயற்பாடு உட்பட அனைத்து தரவுகளையும் கனடா சேகரித்துள்ளது. மட்டுமின்றி, இந்திய அதிகாரிகளின் குரல் பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

கனடா மட்டும் இந்த விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டவில்லை எனவும், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் கனடாவுக்கு இந்த விவகாரத்தில் உதவியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்கக் கோரி கனடா அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றதும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை இந்திய அதிகாரிகள் தரப்பு மறுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே ஜூன் 18ம் திகதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கனேடிய உளவு அமைப்புகள் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் ஜோடி தாமஸ் ஆகஸ்ட் மத்தியில் நான்கு நாட்களும், செப்டம்பர் மாதம் 5 நாட்களும் இந்தியாவில் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் தலையீடு

இந்த நிலையில் தான், இந்தியா மற்றும் கனேடிய அதிகாரிகளின் ரகசிய சந்திப்பின் போது, நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவின் பங்கினை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என கூறப்படுகிறது. அதாவது கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகக் கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளதை ஒப்புக்கொண்டதாகவே கூறப்படுகிறது.

இதனையடுத்தே, கனேடியர் படுகொலையில் இந்தியா கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் கனடாவுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற செயல்களுக்கு சிறப்பு விலக்கு எதுவும் இல்லை. நாடு எதுவாக இருந்தாலும், நமது அடிப்படைக் கொள்கைகளைக் காப்போம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Back to top button