கனடாவில் மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு: பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ எச்சரிக்கை
மளிகை பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரிக்கும் விலைவாசி உக்ரைன் போர், பல்வேறு வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றால் காரணங்களால் கனடாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகரித்து வருவதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கனடாவில் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
மேலும் பணவீக்க விகிதமானது 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய பிரதமர் ரூட்டோ, வால்மார்ட், காஸ்ட்கோ உள்ளிட்ட மேலும் 5 பெரிய வணிக நிறுவனங்களிடம் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை கேட்டுள்ளேன்.
இத்தகைய பெரிய நிறுவனங்கள் வழங்கும் தீர்வுகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பாதிப்புகளை குறைக்கவில்லை என்றால், நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு போன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் என பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்க்கை செலவு நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் மக்களுக்கு உதவும் விதமாக புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்படும் போது பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் லாபம் ஈட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றும் குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களிடம் லாபம் சம்பாதிக்க கூடாது என்றும் பிரதமர் ரூட்டோ தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்த்து, கார்பன் வரியை தற்காலிகமாக நீக்குவது, பிளாஸ்டிக் பேக்கேஜிங் இலக்குகளை ரத்து செய்வது ஆகியவற்றையும் ரூட்டோ குறிப்பிட்டார்.